Dashavataram
ஸ்ரீ கிருஷ்ண பகவான் குருஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதையில், தீயவர்களை அழித்து தூயவர்களைக் காக்க யுகங்கள்தோறும் நான் அவதரிக்கிறேன்" எனக்கூறி இருக்கிறார். அதன்படி பரம்பொருளான அந்த ஸ்ரீமந் நாராயணன் துஷ்டர்களை சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்திருக்கிறார். அவை யாவற்றிலும் தசாவதாரம்" எனப்படும் பத்து அவதாரங்களை புராணங்கள் மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ஸ்ரீ ராம, பலராம, ஸ்ரீ கிருஷ்ண, கல்கி என்ற வரிசையில் அப்பத்தும் அமைந்துள்ளன. இக்கால அறிவியல், மானிட உயிர், தொடக்கத்தில் நீரில் உருவாகி நிலத்திற்கு வந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவிக்கிறது. பகவான் எடுத்த தசாவதாரங்கள், இந்த விஞ்ஞான விளக்கத்தை ஒட்டியே அமைந்திருப்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். முதல் அவதாரம் நீர்வாழ் உயிரினமான மத்ஸ்யம், அடுத்தது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடிய கூர்மம் (ஆமை), மூன்றாவது நிலத்திலேயே இருக்கக் கூடிய வராகம், நான்காவது பாதி மனிதனும், பாதி மிருகமுமான நரசிம்ஹம், ஐந்தாவது குள்ள மனிதன் வாமனர், ஆறாவது கானக வாசம் புரிந்த ரிஷிகுமாரர் பரசுராமர், ஏழாவது பண்பாடும் ஒழுக்கமும் மிகுந்த ஸ்ரீராமர், எட்டாவதும், ஒன்பதாவதுமான பலராம, ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் உலகியல் தர்மங்களைப் பிரதிபலிப்பவை. பத்தாவது கலியுகத்தில் நிகழ இருக்கும் கல்கி அவதாரம், அநீதியும், அக்கிரமங்களும் தழைத்தோங்குகின்றனவே என்று சோர்வடையும் நல்ல உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகும்.