இறைவன் நமக்கு அன்னியமானவராக இல்லை, மிக நெருக்கமானவராக உள்ளார் என்பதையே நமக்கு சுவாமி சிவானந்தரின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்துகிறது. சுவாமிகள் பிரார்த்தனைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். அதன் மூலம் இறைவனை விரைவில் உணர முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர்.
இந்த மஹாபுருஷரின் அருள் பெற்றவர்கள் உன்னதமான பல நற்காரியங்களைச் செய்துள்ளனர். அதன் பலன்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, மாணவர்களுக்கு, பக்தர்களுக்கு, பண்டிதர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு என்று அந்தச் சேவைகள் இன்றும் தொடர்கின்றன.
எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு சிறுவன் இந்த மஹாபுருஷரின் அருளால், உரையாற்ற உலகளவில் ஏறாத முக்கிய பல்கலைக் கழகங்களே இல்லை! அவர்தான் சுவாமி ரங்கநாதானந்தர்.
ஒரு கிராமத்து இளைஞன் இந்த மஹாபுருஷரின் தீட்சையால் லட்சக்கணக்கானோரைப் படிக்க வைத்தார். ஆம், கோயம்புத்தூர் ராமகிருஷ்ண வித்யாலயம் ஆரம்பித்த ஐயா அவிநாசிலிங்க செட்டியார்தான் அந்தச் சிறுவன்.
இன்னொரு வாலிபர் மேலைநாடு சென்று ஐ.சி.எஸ் படித்து ஆங்கிலேயனுக்கு அடிமைத் தொழில் செய்ய இருந்தார். மஹாபுருஷரின் அருள் பலத்தால், 72 கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழ் நாட்டின் கல்வித் தந்தையானார். அவரே சுவாமி சித்பவானந்தர்.
கிராமத்திலிருந்து தம்பிடிக் காசில்லாமல் வந்தார் ஓர் இளைஞன். சென்னை மாணவரில்லத்தில் சேர்ந்தார். இந்த மஹாபுருஷரின் அருளுக்குப் பாத்திரமாகி, அற்புதமான ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். ‘அண்ணா’ என்ற அடைமொழியில் அடைப்பட்டார்.
70–க்கும் மேலான சாஸ்திர நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். இந்து மதத்தின் ஆதார நூல்களான இவற்றை ஆதாரபூர்வமாக சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடுவதற்கு வகை செய்தவர் அண்ணா சுப்ரமண்யம்.
இப்படி பல சாதனையாளர்களைப் படைத்தவரின் அசாத்தியமான வரலாறுதான் உங்கள் கையில் உள்ளது.
இந்த ஆசிர்வாதமே இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.